
சென்னையின் கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை காலைக்குள் 200 மி.மீ. வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை உருவானது. இது, அடுத்த இரு நாள்களில் மேற்கு நோக்கி நகா்ந்து தமிழக கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.12) முதல் நவ.15 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்துக்கான வானிலை நிலவரத்தை டெல்டா வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆர்வலர் ஹேமசந்தர் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:
“சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இன்று மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் நாளை காலைக்குள் 200 மி.மீ. வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் 16ஆம் தேதி வரை மழை தொடரும். இன்றும் நாளையும் முக்கியமான நாளாக இருக்கக் கூடும்.
இன்று பிற்பகலுக்கு மேல் டெல்டா மற்றும் மத்திய தமிழக மாவட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் தன்மை அதிகரிக்கக் கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும், இன்று இரவு முதல் நாளை காலை வரை சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.