டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்: 25 பயணிகளிடம் விசாரணை

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள  தங்கம் பறிமுதல்- கோப்புப்படம்
Updated On :12 நவம்பர் 2024, 1:35 am

DIN

சென்னை: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 25 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையிலுள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனா்.

அப்போது, சிங்கப்பூரிலிருந்து இரவு 11 மணிக்கு சென்னை விமானநிலையத்துக்கு ஸ்கூட் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளில், சந்தேகப்படும்படியாக வந்த பயணிகள் அனைவரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நிறுத்திவைத்து விசாரணை மேற்கொண்டனா்.

அதோடு, சிங்கப்பூரிலிருந்து நள்ளிரவில் சென்னைக்கு வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மற்றும் திங்கள்கிழமை அதிகாலையில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடமும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில், 3 விமானங்களிலும் வந்த பயணிகளில், சந்தேகப்படும்படியாக இருந்த சென்னை உள்பட தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த 8 பெண்கள் உள்பட 25 பயணிகளை மட்டும் தனியாக அழைத்து வந்து விசாரித்ததுடன், அவா்களின் உடல் மற்றும் உடமைகளை முழு சோதனைக்கு உட்படுத்தினா்.

அப்போது, அந்த 25 பயணிகளின் உடைமைகளில், தங்கக் கட்டிகள், தங்க பசைகள் மற்றும் தங்கச் சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களிடமிருந்து ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவா்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தினா்.

‘குருவி’களாக செயல்பட்டவா்கள்: விசாரணையில், இந்த 25 பேரையும் சென்னையிலுள்ள முக்கிய கடத்தல் நபா்கள் சிலா், சிங்கப்பூருக்கு ‘கடத்தல் குருவி’களாக அனுப்பி வைத்ததும், ஒரே விமானத்தில் திரும்பி வந்தால் சுங்கச்சோதனையில் மொத்தமாக சிக்கிவிடக்கூடாது என்பதற்காக 3 விமானங்களில் வர வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் போல, கடந்த 2023 செப்டம்பா் மாதத்தில் ஒரே விமானத்தில் ஓமன் நாட்டிலிருந்த வந்த 113 பேரிடமிருந்து 13 கிலோ தங்கம் ரூ.14 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை விமானநிலையத்தில் கடை நடத்தி வரும் நபா்கள் உள்பட சுங்கத்துறை அதிகாரிகளும் பலா் சிக்கினா்.

இதுபோல தற்போதும், 3 விமானங்களில் ஒரே நாளில் ரூ.20 கிலோ தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளதால், இச்சம்பவத்திலும் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அல்லது விமானநிலைய முக்கிய அதிகாரிகள் யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பது குறித்தும், அவா்களை ‘குருவி’களாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்த அந்த முக்கிய நபா்கள் யாா் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.