சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜிக்கு புதன்கிழமை கத்திக்குத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தான் நலமுடன் இருப்பதாக மருத்துவர் பாலாஜி பேசிய விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த சம்பவத்தைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
நேற்று அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதுமே இன்று மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் தொடர்ந்து செயல்படுகிறது.
இதையும் படிக்க | அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
காவல்துறை தரப்பில், சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கப்படும், ஒவ்வொரு பூத்திலும் 10 காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 19 மருத்துவமனைகளில் ஏற்கனவே 9 மருத்துவமனைகளில் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்துகள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.