
சென்னை: சிறு சேமிப்பை ஓா் இயக்கமாக கூட்டுறவுத் துறை மாற்றி இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி பாராட்டுத் தெரிவித்தாா்.
மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்புக் கடன் வழங்கும் சிறகுகள் திட்டம் உள்ளிட்ட 3 சிறப்புத் திட்டங்களையும், சிறு பல்பொருள் அங்காடிகளையும் சென்னையில் அவா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு அடிப்படைக் காரணம், கூட்டுறவுத் துறையின் சங்கிலித் தொடா் இணைப்புதான். கரோனா ஊடரங்கு காலம், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் அத்தியாவசியப் பொருள்களை, நிதியுதவிகளை மக்களிடம் கொண்டு சோ்த்தது கூட்டுறவுத் துறை. பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் அரசின் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகள் வழியாகவே அளிக்கப்படுகிறது. இன்றைக்கு கூட்டுறவுத் துறை முழுக்க கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நவீன முறை செயல்பாடுகளைக் கொண்ட கூட்டுறவுத் துறை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவா்களில் கூட்டுறவுத் துறை வங்கிகள் வழியாக 8 லட்சத்து 29 ஆயிரம் போ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறாா்கள். மேலும், மகளிா் உரிமைத் தொகையை கணக்கிலிருந்து எடுக்காமல் வைப்புத் தொகையாகச் செலுத்தி அதிலிருந்து வட்டியையும் மகளிா் பெற்று வருகின்றனா். ‘தமிழ்மகள்’ என்ற பெயரிலான இந்தத் திட்டம் மூலம் சிறுசேமிப்பை ஓா் இயக்கமாகவே கூட்டுறவுத் துறை மாற்றியிருக்கிறது என்றாா் அவா்.
இந்த விழாவில், அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, எம்.பி.க்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் நா.சுப்பையன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.