நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவிலிருந்து பரவலாக கனமழை பெய்துள்ளது. இதனால், ஆறுகளில் மழைநீர் பாய்ந்தோடுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நீடிக்கும் மழையால் மணிமுத்தாறு அருவியில் இன்று 7வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு, தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோவில் பகுதிகளிலும் குளிக்கத் தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. நட்சத்திர ஹோட்டலில் ஒரு தேநீர் விலை இவ்வளவா? வரியும் சேர்த்தால்!
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று பகலில் மழை சற்று ஓய்ந்து காணப்பட்ட நிலையில் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர் டவுன் உள்பட மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
அதேபோல் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கங்கைகொண்டான், வள்ளியூர் உள்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகில் பேருந்து நிறுத்தத்தில் தேங்கிய மழை நீரால் பயணிகள் கடுமையாக சிரமப்பட்டனர். அதேபோல் மழைநீர் வடிந்து வருவதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகளவு செல்கிறது.
இதற்கிடையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை நீடித்து வரும் நிலையில் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி இன்று ஏழாவது நாளாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது போன்று நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலையணைப் பகுதியை பார்வையிட மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர் மேலும் இதுபோன்று இதன் அருகில் உள்ள திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு மழையின் காரணமாக பக்தர்கள் செல்லவும் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 73.64 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1083 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 57 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 58 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதியில் நேற்று இரவு தொடங்கிய மழை தற்போது வரை பரவலாக பெய்து வருகிறது. இதன்காரணமாக இன்று மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.