புதுச்சேரி, காரைக்கால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாயுள்ளது.
கனமழை எச்சரிக்கையை அடுத்து, நவம்பர் 27 (நாளை) அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (26-11-2024) காலை 08.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக,
27-11-2024: புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரக்கோணத்திலிருந்து காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.