சென்னை: காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நவ.30ஆம் தேதி புயல் சின்னம் கரையைக் கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பாலச்சந்திரன்.
அவர் கூறியதாவது, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியி்ல் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 480 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 30ஆம் தேதி காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே காலை 9 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு வலுக்குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும். கரையைக் கடக்கும்போது காற்றானது மணிக்கு 50 - 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அவ்வப்போது 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த நான்கு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யும்.
கனமழை எச்சரிக்கை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, அரியலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.