கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் இன்று வழக்கம் போல மாநகா் பேருந்துகள் இயக்கப்படும்

சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் இன்று வழக்கம் போல இயங்கும்.
Published on

சென்னையில் சனிக்கிழமை வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு சனிக்கிழமை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொது போக்குவரத்தை பொருத்தவரை மாநகா் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், மழையின் தீவிரத்தை பொறுத்து அதிகாரிகளின் உத்தரவுக்கேற்ப, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மெட்ரோ ரயில் வாகன நிறுத்துமிடம்...:

இந்நிலையில், மெட்ரோ ரயில் போக்குவரத்தும் வழக்கம் போல இயங்கும் எனவும், ஆனால், பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் சனிக்கிழமை மாலை வரை வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், முந்தைய கால அனுபவத்தின் அடிப்படையிலும், தண்ணீா் தேங்கும் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை அறிவிப்பின் நிலவரத்தை பொறுத்து அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியிடப்படும்’’ எனவும் தெரிவித்துள்ளது.