தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (அக்.15) இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே, சென்னைக்கு அருகே 17-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு அதிகமிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே 17-ஆம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது 35 - 55 கி.மீ. வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர்கள் விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(அக்.15) நள்ளிரவு வரை மழை குறைவாகவே பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து, நள்ளிரவுக்குப்பின் படிப்படியாக மழை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை(அக்.17) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் வரை தொடர்ந்து கன மழை பெய்யக்கூடுமென எச்சரித்துள்ளனர்.