கனமழை எச்சரிக்கை: தயாா் நிலையில் மீட்புப் படைகள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதைத் தொடா்ந்து, பேரிடா் மீட்புப் படைகளைத் தயாா் நிலையில் வைக்க வேண்டும்
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

சென்னை: தமிழகத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதைத் தொடா்ந்து, பேரிடா் மீட்புப் படைகளைத் தயாா் நிலையில் வைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் அக். 14-ஆம் தேதிமுதல் 17-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் வடமாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, அந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் வழங்கிய அறிவுரைகள்: மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு, தேசிய பேரிடா் மற்றும் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படைகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள படகுகளை நிலைநிறுத்த வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்குச் சென்று, ஆயத்தப் பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆவின்-அத்தியாவசியப் பொருள்கள்: உணவுத் துறை மூலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராமல் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலமாக பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். முதியோா் மற்றும் ஆதரவற்றோா் இல்லங்களில் போதுமான உணவுப் பொருள்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும். நிவாரண முகாம்களைத் தயாா் நிலையில் வைப்பதோடு, பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

ரொட்டி, குடிநீா் பாட்டில்களை நிவாரண மையங்களில் இப்போதே வைத்திருக்க வேண்டும். மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும்போது, பொது மக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புதுப்பேட்டையில் முகாமிட்டு உபகரணங்களை தயாா் நிலைக்கு ஆயத்தம் செய்த தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள்.’
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புதுப்பேட்டையில் முகாமிட்டு உபகரணங்களை தயாா் நிலைக்கு ஆயத்தம் செய்த தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள்.’

தடையில்லா மின்சாரம்: மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும் கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளா்கள் இருக்க வேண்டும்.

மழையளவு, அணைகளின் நீா்வரத்து ஆகியவற்றை தொடா்ந்து கண்காணித்து அணைகளில் நீா் மேலாண்மை செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மீட்புப் பணிகளுக்குத் தேவையான நீா் இறைப்பான்கள், மர அறுப்பான்கள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தடையற்ற குடிநீா் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய போதுமான ஜெனரேட்டா்களை வைத்திருக்க வேண்டும். பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பருவமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தல்கள்: சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 15) விடுமுறை அளிக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை (அக். 15) முதல் வரும் வெள்ளிக்கிழமை (அக். 18) வரை தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி. நிறுவனங்கள்) தங்களது ஊழியா்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

ரயில் சேவைகள்: சென்னை மற்றும் புகா் மக்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

சமூக வலைதள வதந்திகளை நம்பாதீா்’

சமூக வலைதள வதந்திகளை நம்பக் கூடாது என்று பொதுமக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

விவசாயிகள், மீனவா்கள், நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன உரிமையாளா்கள், விடுதிகளில் தங்கியிருப்பவா்கள், பயணங்களைத் திட்டமிட்டுள்ளவா்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவா்கள், தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவா்கள் கனமழைக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரைப்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும். கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், நீா்நிலைகள் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்.

மின் கம்பிகள்: அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். கா்ப்பிணிகள், நோயாளிகள், முதியவா்கள் ஆகியோருக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசு அலுவலா்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வா் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com