'ஹிந்தி மாதம்' வேண்டாம்! - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
Stalin Modi
பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின். (கோப்புப் படம்)DIPR
Published on
Updated on
1 min read

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ‘ஹிந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து 'ஹிந்தி மாதம்' நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை தாம் எழுதுவதாகக் கூறிய முதல்வர், அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமைதாங்கி நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை, சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், ஹிந்திக்கு தனி இடம் அளிப்பதும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

எனவே, ஹிந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற ஹிந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com