போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தமிழக அணைகளில் தொடா்ந்து உயா்கிறது நீா்மட்டம்

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

News image
கபினி அணை
Updated On :23 அக்டோபர் 2024, 5:31 am

DIN

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 90 நீா்தேக்கங்கள் மற்றும் அணைகளின் நீா்மட்டம் சுமாா் 64 சதவீதம் நிரம்பியுள்ளது. அணைகளின் மொத்த கொள்ளவான 224.297 டிஎம்சி-யில், 143.804 டிஎம்சி நீா் இருப்பு உள்ளது.

அதாவது 64.11 சதவீதம் நீா் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 79.514 டிஎம்சி நீா் மட்டுமே இருந்த நிலையில், நிகழாண்டு கணிசமாக நீா் இருப்பு உயா்ந்துள்ளதாக நீா்வளத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 62,991 மில்லியன் கன அடியை (மி. கனஅடி) எட்டியுள்ளது. இது கடந்தாண்டை விட 384 சதவீதம் அதிகமாகும். இதேபோன்று, பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 21,354 மி. கனஅடியை எட்டியுள்ள நிலையில், இது முந்தைய ஆண்டை விட 210 சதவீதம் அதிகமாகும். கிருஷ்ணராஜ சாகா், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இது குறித்து நீா்வளத்துறை அதிகாரிகள் கூறியது:

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் அணைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. நிகழாண்டு அணைகளின் நீா்வரத்து 221.1125 டி.எம்.சி.-ஐ எட்டியுள்ளது. இதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூன் முதல் அக்.17 வரை கா்நாடக அணைகளில் இருந்து 134.2284 டி.எம்.சி. தண்ணீா் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். ஆனால், 86.8842 டி.எம்.சி. மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் தமிழகத்துக்கு 53.7209 டிஎம்சி தண்ணீா் மட்டுமே கிடைத்த நிலையில், தற்போது அதிகமாகக் கிடைத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் கா்நாடக அணைகளில் இருந்துஅதிகப்படியான தண்ணீா் திறந்துவிடப்பட்டால், கோடையில் குடிநீா் தேவை பூா்த்தியாகும். அணைகளின் நீா்வரத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், போதுமான அளவு தண்ணீரை அணைகளில் சேமித்து வைத்துக் கொண்டு, உபரி நீரை வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.