சினிமாவை உதறிவிட்டு அரசியலுக்கு வர என்ன காரணம்? -விஜய்யின் பதில்

என்ன காரணத்துக்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.
சினிமாவை உதறிவிட்டு அரசியலுக்கு வர என்ன காரணம்?  -விஜய்யின் பதில்
PTI
Published on
Updated on
1 min read

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெற்றது.

மேடை ஏறிய தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் இருக்கும் இந்த காலகட்டத்தில், என்ன காரணத்துக்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் பேசியதாவது, “என்னை மாற்றியது மக்களாகிய நீங்கள். எல்லாவற்றையும் தீர்மானிப்பதும் நீங்கள். என்னிடம் இருப்பது உண்மை, நேர்மை, உழைப்பு.

இப்போது அரசியல் களத்துக்கு என்னை அழைத்து வந்திருப்பதும் மக்களே. இங்கும் ஓய்வில்லாமல், அலட்டிக்கொள்ளாமல் உழைப்பேன்.

உங்கள் ஒவ்வொருவருடைய விரல் நுனியில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி இருக்கும்போது, எனக்கு கவலையில்லை. எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

அரசியல் வேண்டாம் என நினைத்து வாழ்ந்து வந்த நான், ஒருகட்டத்துக்கு மேல் பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறோம் என்று தோன்றியது.

நாம மட்டும் நல்லாயிருக்கணும் என்று நினைப்பது சுயநலமில்லையா? நம்மை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது செய்யாமலிருப்பது விசுவாசமா?

நமக்கு இந்த வாழ்க்கையை அளித்த இந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம்? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.. நம்மை வாழ வைத்த மக்களுக்கு என்ன செய்வது என யோசித்தபோது தான்... அரசியல் என்ற எண்ணம் உதித்தது.

தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி கண்டவர்கள் என அனைவரைப் பற்றியும் பாடம் படித்துவிட்டு, பலருடைய உந்துதலை ஊக்கமாய் எடுத்துக்கொண்டு, என்னுடைய சினிமா வாழ்க்கையின் உச்சத்தை உதறிவிட்டு, அதில் கிடைக்கும் ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜய்யாக, உங்களை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்திருக்கிறேன்.

2026-ஆம் அண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, அத்தனை அரசியல் அழுக்குகளையும் தமிழ வெற்றிக் கழகம் நீக்கும்!” என்று விஜய் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.