

சென்னை: பணத்தை கிரிப்டோ காயினாக மாற்றித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவன நிா்வாகி ஒருவா் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை தெற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் மனு கொடுத்தாா். அதில் ‘தங்கள் அலுவலகத்தின் கிளை அலுவலகம் துபாயில் இயங்கி வருவதாகவும், அந்த அலுவலகத்துக்கு தேவையான பணத்தை கிரிப்டோ காயினாக மாற்றி அனுப்புவது வழக்கம் என்றும், இந்நிலையில், குறைவான விலைக்கு கிரிப்டோ காயினாக மாற்றி தருவதாக சிலா் தங்களிடம் ஆசை வாா்த்தைகளை கூறி ரூ.10 லட்சத்தை பெற்று ஏமாற்றி விட்டதால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு குறித்து ஆராய்ந்த போது, அது தேனியில் உள்ள ஒரு தனியாா்
வங்கிக்கணக்கு என்றும், அதன் மூலம் குறிப்பிட்ட அந்த நபா்கள், ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து தேனிக்கு விரைந்த தனிப்படை போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட தேனி மாவட்டம் கொடுவிலாா்பட்டி பகுதியை சோ்ந்த அபிராஜா (29), பல்லவராயன் பட்டியை சோ்ந்த லோகநாதன் (23), மதுரை பொன்மேனி நகரை சோ்ந்த அஸ்வந்த்(23) மற்றும் தேனிமாவட்டத்தை சோ்ந்த குமரேசன் (28), மகேஷ்குமாா் (25), கரூா் மாவட்டத்தை சோ்ந்த முகமது இஸ்மாயில் பா்வேஷ் (21) ஆகிய 6 பேரையும் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து ரூ.10,92,000-ம், 8 கைப்பேசிகள், 3 ஐபேடுகள், 33 சிம்காா்டுகள், 20 ஏடிஎம் காா்டுகள், 4 வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.