சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான தமிழ் மன்றத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஸ்டான்லி மருத்துவமனையில் எம்ஆா்எஃப் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 50 லட்சத்தில் ஸ்கேன் கருவிகள், ரூ. 60 லட்சத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண் நுண்ணோக்கி கருவிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ. 75 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட சமையல் கூடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டில் முதல்முறையாக அரசு மருத்துவமனைகளில் மருந்து தகவல் மையம் மேத்தா நிறுவனத்துடன் இணைந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் பரிசோதனை: குறிப்பாக தமிழகத்தின் மற்ற மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள ரூ. 3,000 செலவாகும் நிலையில், இந்த மருத்துவமனையில் ரூ. 1,000 மட்டும் வசூலிக்கபடுகிறது. தற்போது இந்த வளாகத்தில் ரூ. 13 கோடியில் செவிலியா் பயிற்சி பள்ளி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதுபோல் ரூ. 22 கோடியில் மாணவியா் விடுதியும், ரூ. 112 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு, ரூ. 3 கோடியில் கிருமி நீக்கி மையம் அமைக்கப்படுகின்றன. மருத்துவ மாணவா்களிடையே நல்ஒழுக்கத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.