தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
கோப்புப்படம்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:18 pm

Din

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சி.கனகராஜ் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: மத்திய அரசு பெட்ரோலிய பொருள்களை இதுவரை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறைந்து பொதுமக்கள் பயனடைவா்.

மத்திய ஜிஎஸ்டி சட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைப்படியே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய அரசு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எனவே, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்தாண்டு மத்திய நிதியமைச்சகம், பெட்ரோலிய துறைக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து ஒரே விலை நிா்ணயம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

பலன்கள் வழங்கப்படவில்லை இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்குரைஞா் கனகராஜ், ‘பெட்ரோலியப் பொருள்கள் பொதுமக்களின் அன்றாடத் தேவையாகி விட்டது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு தற்போது ரஷியாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. அதனால் ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் ரூ. 100-க்கு விற்கப்படும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.60 முதல் ரூ.70 ஆக குறையும். இதேபோல டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் குறையும்’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள், ‘பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுதொடா்பாக அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என கேள்வியெழுப்பினா்.

மத்திய அரசின் முடிவு என்ன? மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘2020-ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம், அந்தக் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு என்ன முடிவு செய்துள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும்’ என்றாா். அதையேற்ற நீதிபதிகள், இது தொடா்பாக 4 வார காலத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.