நெல்லையில் சக மாணவரை மிரட்டுவதற்காக பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை அருகே தாழையூத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்துள்ளார்.
அவருக்கும் சக மாணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சக மாணவர் அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சக மாணவருக்கு எச்சரிக்கை விடுக்க அரிவாள் கொண்டு வந்துள்ளார்.
பின்னர் மாணவர்கள் இதுகுறித்து ஆசிரியரிடம் தெரிவிக்க, தலைமை ஆசிரியருக்குத் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் இதுகுறித்து இரு மாணவர்களிடமும் பேசிய பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களை வரச் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இரு மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.
விசாரணைக்குப் பிறகு அரிவாள் எடுத்து வந்த மாணவர், சக மாணவர், அரிவாள் எடுத்துவர உதவிய ஒருவர் என மூவரையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் நாங்குநேரியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 3 பேர், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக ஆசிரியரைத் தாக்குவதற்காக கத்தியைக் கொண்டு வந்து பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.