அமெரிக்க தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடலாம்..! -தமிழிசை

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லையென்றால் கமலா ஹாரிஸ், டிரம்ப்புடன் ராகுல் காந்தி போட்டியிடலாம்! -தமிழிசை
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
Published on
Updated on
1 min read

அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ், டிரம்ப்புடன் ஏதாவதொரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடலாமே என பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

சென்னையில் இன்று(செப்.12) செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, “மத்தியில் பாஜக நன்றாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்று நமது நாட்டின் பெருமையை முற்றிலுமாகக் குலைத்து வருகிறார், வேண்டுமென்றே செய்கிறார்.

பிரதமரை பற்றி பேசினால்தான் அவருக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக தப்பு தப்பாக பேசுகிறார். மாணவர்கள் மத்தியில் பேசும்போது ஒரு கருத்தை பேசி இருக்கிறார். தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என பேசி இருக்கிறார்.

அப்படியானால், தமிழகத்தில் 40க்கும் 40 வெற்றி பெற்றது எப்படி? தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தை அவர் குறைத்து மதிப்பிடுகிறார். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

உங்கள் வெற்றி உண்மையானது அல்ல என்று, உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களே சொல்லி இருக்கிறார்கள். நூறு தொகுதிகளைக் கூட நீங்கள் தாண்டவில்லை, ஆனால் கார்கே சொல்லுகிறார் இன்னும் சில இடங்கள் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் பலபேரைச் சிறையில் தள்ளி இருப்போம் எனக் கூறுகிறார்.

அதிக தொகுதி ஜெயித்திருந்தால் நாட்டிற்கு நல்லது செய்வோம் என அவர் பேசவில்லை, இன்றைக்கும் அந்த எமர்ஜென்சி புத்திதான் உள்ளது. எமர்ஜென்சி புத்தியை வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை குறித்து அந்நிய நாட்டுக்கு போய் ராகுல் காந்தி பேசி வருவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ராகுலுக்கு இந்திய ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லையென்றால், கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப்கூட சென்று ஏதோவொரு தொகுதியில் போட்டியிடட்டும். அவர் இந்தியாவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

இந்திய திருநாட்டை மிக மோசமாக பேசி வருகிறார் அவர். சீனாவை பற்றி பேசுகிறார். அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் மிக மோசமான சீன கொள்கை வைத்திருந்தது. ராகுல் காந்தி தனது பேச்சுக்கு முற்றிலுமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.