சிதம்பரத்திலிருந்தது செப்டம்பர் 1ஆம் தேதி உத்தரகண்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றவர்களில் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பேர் ஆதி கைலாஷுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், ஆதி கைலாஷ் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு 18 கிலோமீட்டர் தூரத்தில் 30 பேரும் சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேறகொண்டுள்ளது.
இதையடுத்து, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதி கைலாஷிலிருந்து யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உத்தரகண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, உத்தரகண்ட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சிதம்பரத்தைச் சார்ந்த பராசக்தி என்பவருடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். அப்போது உத்தரகண்ட்டில் உள்ள அவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.