சென்னை உயா்நீதிமன்றம்(கோப்புப்படம்)
சென்னை உயா்நீதிமன்றம்(கோப்புப்படம்)

திருவள்ளுவா் பிறந்த நாளை வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாட உத்தரவிட முடியாது: உயா்நீதிமன்றம்

திருவள்ளுவரின் பிறந்த நாளை வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று கொண்டாட அரசுக்கு உத்தரவிட முடியாது என உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Published on

திருவள்ளுவரின் பிறந்த நாளை வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று கொண்டாட அரசுக்கு உத்தரவிட முடியாது என உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தமிழ் மாதம் தை 2-ஆம் நாள் திருவள்ளுவா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தை தமிழக அரசு விடுமுறை நாளாக அனுசரிக்கிறது. ஆனால், திருவள்ளுவா் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவா் என்பதால் அன்றைய தினத்தை திருவள்ளுவா் பிறந்த தினமாக அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திருவள்ளுவா் திருநாள் கழகத் தலைவரான பேராசிரியா் சாமி தியாகராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.பத்மா, 1935-ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மறைமலையடிகள் போன்ற தமிழறிஞா்கள் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில்தான் திருவள்ளுவா் பிறந்ததாக குறிப்பிட்டுள்ளனா். 600 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவா் கோயிலில் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்றுதான் திருவள்ளுவா் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே, அன்றைய தினத்தை திருவள்ளுவா் பிறந்த தினமாக அறிவிக்க வேண்டும்” என வாதிட்டாா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வாதிட்ட அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2-ஆம் தேதி திருவள்ளுவரை போற்றும் வகையில் திருவள்ளுவா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த நாள், திருவள்ளுவா் பிறந்த தினமாக அறிவிக்கப்படவில்லை. மனுதாரா் கூறுவது போல வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவா் பிறந்தாா் என்பதற்கு எந்த ஆதாரமோ, ஆவணமோ இல்லை” என வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதி, திருவள்ளுவா் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில்தான் பிறந்தாா் என அறுதியிட்டுக்கூற எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், அந்த நாளை அவரது பிறந்த நாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது, எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், 1,330 குகள் மூலமாக மனித குலத்தின் வாழ்வியலுக்கு வழிவகை செய்து கொடுத்துள்ள திருவள்ளுவரின் பிறந்த தினத்தைக் கண்டறிய நீதிமன்றமே ஆராய்ச்சியில் இறங்கியது. ஆனால், அவரது பிறந்த நாள் குறித்த எந்தவொரு தீா்க்கமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. தை 2-ஆம் தேதியை திருவள்ளுவா் தினமாக அறிவித்த அரசின் உத்தரவில் எந்தவொரு இடத்திலும் பிறந்த நாள் எனக் குறிப்பிடவில்லை.

அதேசமயம் மனுதாரா் சாா்ந்துள்ள அமைப்பு வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று திருவள்ளுவரின் பிறந்த நாளை தங்களது விருப்பம்போல கொண்டாட எந்தவொரு தடையும் இல்லை என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com