
கேரளத்தில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில், இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக சென்றது. அப்போது பள்ளிக்கு வந்த குழந்தைகள் மீது மோதும் வகையில் வந்ததுடன், அங்கிருந்த 2 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, லாரியை பின் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான காவல்துறையினர் சென்றுள்ளனர். இருப்பினும், லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதனையடுத்து, லாரி முன்பாக சென்ற காவல்துறையினர் லாரியை நிறுத்த முயற்சி செய்தனர்.
இந்த நிலையில், லாரியில் வைத்திருந்த கற்களால் போலீஸாரை அவர்கள் கடுமையாக தாக்கினர். இதில், ஆய்வாளர் தவமணி, காவலர் ரஞ்சித் குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், லாரியின் பின்புற கதவை திறந்து, அங்கிருந்து அடர்ந்த முள்ளு காட்டுக்குள் தப்பியோடிய 7 பேரில் ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த போலீஸார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனடியாக கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கப்பட்டதும், அதிரடி படையினருடன் வந்து வாகனத்தை சுற்றி வளைத்தனர். இந்த நிலையில் ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, லாரியை சோதனை செய்துள்ளனர். என்கவுண்டர் செய்யப்பட்ட கொள்ளையன் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது.
லாரியில் கட்டுக்கட்டாக பணமும், ஒரு சொகுசு காரும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கேரளத்தில் திருச்சூரில் அதிகாலை 3 முதல் 4 மணிக்குள் மட்டும் அடுத்தடுத்து 3 ஏடிஎம் மையங்களில், காரில் வந்த கொள்ளையர்கள் ரூ. 65 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கேரளத்தில் கொள்ளையடித்தவர்கள்தான் குமாரபாளையத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.