வடமாநில கொள்ளை கும்பல் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்தது ஏன்? சேலம் சரக டிஐஜி உமா விளக்கம்

எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை கும்பல் செயல்பட்டிருப்பதாக சேலம் சரக டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார்.
வடமாநில கொள்ளையர் கைது
வடமாநில கொள்ளையர் கைது
Published on
Updated on
2 min read

நாமக்கல்: கேரளத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து, ஹரியாணாவிலிருந்து காரில் வந்த கொள்ளை கும்பல், மூன்று ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்லும்போது தமிழகக் காவல்துறையினரால் பிடிபட்டிருப்பதாக சேலம் சரக டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, கண்டெய்னர் லாரியில் தப்பிச் சென்ற வடமாநில கொள்ளை கும்பலை தமிழக காவல்துறையினர் தீரத்துடன் செயல்பட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வடமாநில கொள்ளை கும்பலை பிடித்தபோது, அதிலிருந்த அசாருதீன் பணப்பையுடன் தப்பியோடுகிறார். அவர் பின்னால் ஜுமான் என்பவர் ஓடினார். ஜுமானை எஸ்ஐ பிடிக்க முயன்றபோது, அவரை ஜுமான் தாக்கினார். இதனால், பின்னால் வந்த ஆய்வாளர் ஜுமானை சுட்டதில் அவர் பலியானார். அசாருதீன் காவலர்களை நோக்கி கற்களை வீசி தாக்கியதால், அவரையும் முட்டியில் சுட்டுப் பிடித்தோம்.

முன்னதாக, கேரளத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை குறித்து நமக்கு தகவல் கிடைத்தது. நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கண்டெய்னர் லாரியை மடக்க முயன்றோம்.

ஆனால் தப்பி வேகமாகச் சென்று இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை இடித்தபடி சென்ற வாகனத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

வடமாநில கொள்ளையர்கள் ஏழு பேருமே ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 5 பேர் பல்வாலா மாவட்டத்தையும் 2 பேர் நூ மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கண்டெய்னர் லாரியில் இருந்தது கிரேட்டா கார் என்பதும், ஏடிஎம்களை உடைக்கும் குற்றச்செயலில் ஈடுபட பயன்படுத்திய கார் என்பதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலில் கிரேட்டா காரின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

ஏழு பேரில் ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார், ஒருவர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீது தமிழகத்தில் இதுவரை எந்த வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த மேவாத் குற்றவாளிகளை ஏற்கனவே பிடித்திருக்கிறோம். இவர்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க கிருஷ்ணகிரி காவல்துறை வந்துள்ளனர்.

இந்தக் கொள்ளையர்களை பவாரியா என்று வகைப்படுத்த முடியாது. முதற்கட்ட விசாரணையை நாம் முடித்தபிறகுதான் கேரள காவல்துறையினரிடம் விசாரணை ஒப்படைக்கப்படும்.

இவர்கள் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்- என்று குறிப்பிட்டு கொள்ளையடிக்க வருகிறார்கள். எஸ்பிஐ ஏடிஎம்-மில்தான் பணம் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதால், இவர்களது முக்கிய இலக்கு எஸ்பிஐ ஏடிஎம்கள்தான் என்று கொள்ளையர்கள் கூறியிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கண்டெய்னரை சுற்றி வளைத்தபோதும், அதற்குள் ஆள்கள் இருப்பது முதலில் காவல்துறையினருக்குத் தெரியாது. பிறகு அதிலிருந்து சப்தம் வந்ததால்தான் எச்சரிக்கை அடைந்தோம் என்றார். கேரள காவல்துறையினர் அனுப்பிய புகைப்படத்தில் இருந்தது அந்த கார்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com