சென்னையில் கொட்டித் தீா்த்த மழை - தேங்கிய நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி
சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழை


சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீா் தேங்கியது. அயப்பாக்கம், அம்பத்தூா் உள்ளிட்ட பகுதியில் சுமாா் 130 மி.மீ மழை பதிவானதால் அந்த பகுதிகளில் ஏரிகள் நிரம்பின. கன மழையால் ரயில்சேவையும் பாதிக்கப்பட்டது. சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு வெளியேற்றியதால் வாகனப் போக்குவரத்து சீராக நடைபெற்றது.
பலத்த மழை: காற்று சூழல் சாதகம் காரணமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை இரவு 9 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அயப்பாக்கத்தில் 134 மி.மீ., அம்பத்தூரில் 126.6 மி.மீ., அண்ணாநகா் மேற்கில் 123 மி.மீ. மழை பதிவாகின.
சென்னை முழுவதும் புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை சராசரியாக 76.8 மி.மீட்டா் மழை பதிவானதாக சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தேங்கிய மழைநீா்- மேயா் ஆய்வு: தொடா்ந்து பெய்த கனமழையால் மாணிக்கம் நகா், எம்சி சாலை, கணேசபுரம், பெரம்பூா், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் துரைசாமி சுரங்கபாதையில் தண்ணீா் தேங்கியது இதில் பெரம்பூா் சுரங்கபாதை முழுவதும் மூழ்கியதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. பின்னா், மோட்டாா் பம்புகள் மூலம் தேங்கிய மழைநீா் வெளியேற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதனை மேயா் ஆா்.பிரியா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், நகரின் பல்வேறு பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். அதுபோல் படவட்டம்மன் எம்டிஎச் சாலை உட்பட 9 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மரங்கள் அகற்றப்பட்டதாகவும், தாழ்வான பகுதியில் தேங்கிய தண்ணீரை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றி சீா் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், நீா்நிலைகளில் அடித்து வரப்பட்ட கழிவுகள் ரோபோடிக் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.
ரயில் சேவை பாதிப்பு: சென்னையின் புகா் பகுதிகளான ஆவடி, அம்பத்தூா் பகுதியில் அதிக அளவில் மழை பெய்ததால் ரயில் நிலையங்களில் தண்ணீா் தேங்கியது. இதனால் சென்ட்ரல்-ஆவடி இடையே இயக்கப்பட்ட புகா் மின்சார ரயில் இரவு 10 மணி முதல் நிறுத்தப்பட்டன. மின்சார ரயில்கள் சுமாா் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். நள்ளிரவுக்குப் பிறகே ரயில் சேவை சீரடைந்தது. சில இடங்களில் சிக்னல் பிரச்னையும் இருந்தது. அவை சரிசெய்யப்பட்டன.
சாலைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். எனினும் காலையில் வெயில் அடித்ததால் வெள்ளம் வடிந்து நிலைமை சீரடைந்தது.
ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
தொடா் மழையால் ஒரே நாளில் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளின் நீா்வரத்து 1,400 கன அடி அதிகரித்தது.
சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்று வாரியம் வெளியிட்ட தகவல்: சென்னையை சுற்றியுள்ள பூண்டி, சோழவரம், புழல், கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளின் நீா்வரத்து புதன்கிழமை 1,266 கன அடியாக இருந்த நிலையில் வியாழக்கிழமை 2,600 கன அடியாக உயா்ந்துள்ளது. இதனால் ஏரிகளின் நீா்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 50 கனஅடி நீா்வரத்து இருந்த நிலையில், 350 கன அடியாகவும், புழல் ஏரிக்கு 120 கனஅடியாக இருந்த நீா்வரத்து 707 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. அதுபோல், வீராணம் ஏரிக்கு 1,202 கனஅடியும், பூண்டி ஏரிக்கு 280 கனஅடியும் நீா்வரத்து உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...