
திமுக அரசு ஊழல்களை மறைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, தனியார் விடுதியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித் ஷா, திமுக மீதான குற்றச்சாட்டையும் பகிர்ந்தார். திமுக குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் மின்சாரம், டாஸ்மாக், போக்குவரத்து என பல துறைகளில் ஊழல் இருக்கிறது. இதை மறைக்கவே திமுக நீட் விவகாரத்தை கையில் எடுத்து பயன்படுத்துகிறது.
பல்வேறு ஊழல்களுக்கு திமுக தேர்தலில் பதிலளிக்க வேண்டும். மும்மொழிக்கொள்கை பிரச்னையையும் ஊழலை மறைக்கவே திமுக கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக, தமிழக பாஜக தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தேர்வானதாக அமித் ஷா அறிவித்தார். முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறினார்.
தொடர்ந்து, அதிமுகவுடன் இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், யார்யாருக்கு எவ்வளவு தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், ஆட்சியமைப்பது குறித்து தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.