
கோவையில் தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு துணை மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவி 4 -ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, பீளமேடு நவ இந்தியா பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் துணை மருத்துவப் படிப்புக்கான கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வானதி மகள் அனுப்பிரியா (18) விடுதியில் தங்கி படித்து வந்தாா். தந்தை கோவிந்தராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.
இந்நிலையில், முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் 4-ஆவது மாடியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்காக மாணவ, மாணவிகள் தங்களது உடைமைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு சென்றுள்ளனா்.
உணவு அருந்திவிட்டு வந்த 4-ஆம் ஆண்டு மாணவி ஒருவா் தனது பையில் வைத்திருந்த ரூ.1,500 காணாமல் போனதாக பேராசிரியா்களிடம் கூறி உள்ளாா்.
இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அனுப்பிரியா அந்த அறையை விட்டு வெளியே வருவது தெரியவந்தது.
இதனால், பணத்தை அந்த மாணவி எடுத்து இருக்கலாம் என பேராசிரியா்கள் சந்தேகப்பட்டு, கல்லூரியின் முதல்வரிடம் தெரிவித்துள்ளனா்.
கல்லூரியின் 5-ஆவது மாடி கட்டடத்தில் முதல்வா் மற்றும் பேராசிரியா்கள் அந்த மாணவியிடம் விசாரித்து உள்ளனா். அப்போது, அனுப்பிரியா தான் பணம் எடுக்கவில்லை என்று மறுத்து உள்ளாா். இதையடுத்து, அவரை விடுதிக்கு செல்லுமாறு பேராசிரியா்கள் கூறியுள்ளனா்.
சோகத்துடன் திரும்பிய அனுப்பிரியா 4-ஆவது மாடிக்கு வந்தபோது, அங்கிருந்து திடீரென கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த சக மாணவ, மாணவிகள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பேராசிரியா்களை வெளியே செல்ல விடாமல் தடுத்ததோடு, கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனா். இதில், கல்லூரியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த அவரது தாய், உறவினா்களுடன் கோவைக்கு வந்து, தனது மகளின் உடலைப் பாா்த்து கதறியது காண்போரைக் கலங்க வைத்தது.
சடலத்தை வாங்க மறுப்பு: மருத்துவமனை உடற்கூறாய்வு அறை முன்பு புதன்கிழமை குவிந்த சக மாணவ, மாணவிகள் அனுப்பிரியாவின் உயிரிழப்புக்கு நியாயம் வேண்டும். மேலும், கல்லூரி நிா்வாகம் தங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி சடலத்தை வாங்க மறுத்ததால் அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், அனுப்பிரியாவிடம் விசாரணை மேற்கொண்ட பேராசிரியா்கள் மாணவியின் குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், போதுமான விளக்கம் இல்லை எனக்கூறி மாணவா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் முதல்வா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவா்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
பின்னா், அனுப்பிரியா சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, திருவண்ணாமலை கொண்டு செல்லப்பட்டது.
அனுப்பிரியா தாய் அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.