

கோவையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து, செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் இயங்கிவரும் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறை வாசலில் அமர்ந்து தேர்வெழுத வைத்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி முதல்வர்தான் தன்னை வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று விடியோவில் மாணவி கூறியிருந்தார்.
இதனை விசாரித்த போலீசார், பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கோரி தங்கவேல் பாண்டியன், ஆனந்தி, சாந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி இந்த மூவரின் ஜாமீன் மனுக்களை அவர்கள் சரணடையும் நாளில் பரிசீலிக்க கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, பள்ளி நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவியின் தந்தை, கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.
மேலும் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகிய மூவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.