கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரை வைகோ முடிவின் பின்னணி என்ன?
கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்று துரை வைகோ அறிவித்திருக்கும் முடிவு பற்றி..


சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று(ஏப். 19) அறிக்கை வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
துரை வைகோ, தனது முடிவு குறித்து மிகப்பெரிய விளக்கத்துடன் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், பல்வேறு அரசியல் விவகாரங்களையும், தனது செயல்பாடுகளையும் அவர் எடுத்துக்கூறியிருக்கிறார்.
இறுதியாக, கட்சியிலிருந்து விலகியது குறித்து கூறியிருக்கும் துரை வைகோ, கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.
நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில், கட்சியின் 'முதன்மை செயலாளர்’ என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.
அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிக்கும் இடையே பனிப்போர் இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று அது வெடித்திருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
எனினும், துரை வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், யார் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று பெயர் குறிப்பிடாமலேயே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், மதிமுகவின் நிர்வாகக் குழு நாளை கூடவிருக்கும் நிலையில், அக்கட்சியின் முதன்மைப் பொதுச் செயலர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்றும் கூறப்படுகிறது. இந்த நாடகம் மல்லை சத்யாவுக்கு எதிராக நடத்தப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதாவது, கட்சி நிறுவனரும், பொதுச் செயலருமான வைகோவின் வலது கரமாக செயல்பட்டு வரும் மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்ததாகவும், மல்லை சத்யாவை கட்சிப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வைகோவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அதற்கு வைகோ மறுத்ததால்தான், துரை வைகோ இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, திமுகவில் மூத்த தலைவராக இருந்த வைகோ, வாரிசு அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கட்சியிலிருந்தே வெளியேறி தனிக்கட்சித் தொடங்கி, இன்று அவரது மகனுக்கு முதன்மைச் செயலர் பதவியை அளித்திருப்பது, மதிமுகவுக்குள் இருக்கும் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் சில மதிமுக தலைவர்கள் திமுகவுக்குச் சென்றனர். ஆனால், தற்போது மூத்த தலைவர்களில் ஒரே ஒருவராக மல்லை சத்யா மட்டுமே மதிமுகவில் இருக்கிறார். அவரும் திமுகவுக்கு சென்றிருக்கலாம் என்றும், ஆனால் வைகோவின் அழுத்தமே அவரை திமுக வரவேற்காததற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணி உறுதி செய்யப்படாத நிலையில், துரை வைகோவின் ஆதரவாளர்கள் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி வந்தனர். சில மாவட்டங்களில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
துரை வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்களின் நெருக்கடியை நிராகரித்த வைகோ, ஏப்ரல் 20ஆம் தேதி மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக துரை வைகோ, கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறன் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாளை நடக்கப்போகும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் என்ன நடக்கப் போகிறது என்று, மதிமுக தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...