சிறுவாணி நீர்போல தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமானதாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
அண்ணா சொன்ன வார்த்தைகளை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மனதில் வைத்து மக்களைச் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில், இன்று 2வது நாளாகவும் நடைபெற்றது.
இதில் தவெக தலைவர் விஜய், அறிஞர் அண்ணாவை மேற்கோள் காட்டிப் பேசினார்.
''தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமான ஆட்சியாக இருக்கும். நம் ஆட்சியில் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் இருக்கமாட்டார்கள், அதனால், பூத் கமிட்டி உறுப்பினர்கள் தைரியத்துடன் மக்களைச் சந்திக்க வேண்டும்.
அவர்களுக்காக நான், அண்ணா சொன்ன ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய்.
இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், உங்கள் ஊர் சிறுவாணி நீர்போல அவ்வளவு சுத்தமான ஆட்சி அமையும். இன்னும் சொல்லப் போனால், உண்மையான, வெளிப்படையான ஆட்சியாகவும் இருக்கும். இதனை நம் சார்பாக நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுபோடும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமை.
குடும்பம் குடும்பமாக கோயிலுக்குச் செல்வதைப் போல, பண்டிகையைக் கொண்டாடுவது போல, நமக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும்.
இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்கள் செயல்பாடுகள் மிகமிக முக்கியம்; நீங்கள்தான் முதுகெலும்பு, இதனை மனதில் வைத்துச் செயல்படுங்கள்'' எனப் பேசினார்.
இதையும் படிக்க | சமரசத்துக்கு இடமில்லை; தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது: விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.