
சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். மேலும் சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் நீராட்டிற்காக அங்கு எழுந்தருளினார்.
காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்துடன் வந்து காவிரி அண்ணையை வழிபட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.
ஓடும் நீரில் புதுமனத் தம்பதியினர் தங்களது திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வளரும் என்பது ஐதீகம். இதனால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை ஆற்றில் விட்டு தாலியை பிரித்து கோத்து காவிரி அண்ணைக்கு படைத்து அணிந்து கொண்டனர்.
திரளான மக்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொறி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய ஸ்ரீநடராஜர்:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கிற்கு ஸ்ரீசந்திரசேகர சுவாமிகள் (ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூர்த்தி) கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று தீர்த்தவாரி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியை அதற்கான கட்டளைதாரர்கள் நடத்தி வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடையூறுகளினால் இந்த உற்சவம் நடைபெறாமல் நின்று போனது.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் கட்டளைதாரர்கள் உதவியுடன் மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு அன்று தீர்த்தவாரி உற்சவம் தொடங்கியது. இந்த ஆண்டும் ஸ்ரீநடராஜப் பெருமான் தீர்த்தவாரி உற்சவம் கொள்ளிடக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றின் ஓரம் உள்ள பழங்கால நீராழி (தீர்த்தவாரி) மண்டபத்தில் ஆடிப்பெருக்கான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடராஜர் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்தியான ஸ்ரீசந்திரசேகரசுவாமிகள் (ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி) அஸ்தராஜருடன் புறப்பட்டு சென்று எழுந்தருளினார். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளி பொதுமக்களுக்கு தீர்த்தவாரி காட்சி வழங்கினார்.
இதையும் படிக்க: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.