
பிரதமர் நரேந்திர மோடியை, மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று(ஆக. 6) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். கீழடி விவகாரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன்.
அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.