தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தாம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
அரசு தலைமை மருத்துவமனை
அரசு தலைமை மருத்துவமனை
Published on
Updated on
2 min read

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.119.14 கோடி செலவிலான தாம்பரம் – மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.119.14 கோடி செலவிலான தாம்பரம் – மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடம், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை- புறநகர் பிரிவு, ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தாம்பரம் அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 10.01.2023 நாளிட்ட அரசாணையின்படி தாம்பரம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், அம்மருத்துவமனையை வலுப்படுத்தும் பொருட்டு 110 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தாம்பரம் – அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

இப்புதிய மருத்துவமனையில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளவாடப்பொருட்களுடன் தரைத்தளத்தில் அவசர சிகிக்சை பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, ஊடுகதிர் பிரிவு, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகள், முதல் தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கு, இரண்டாம் தளத்தில், மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, அறுவை சிகிச்சை முந்தைய மற்றும் பின் கவனிப்பு பிரிவு, மூன்றாம் தளத்தில் டையாலிசிஸ் பிரிவு, இரத்தவங்கி, உள்நோயாளிகள் பிரிவு, நான்காம் தளத்தில் உள்நோயாளிகள் பிரிவு, தீக்காய சிகிச்சைப் பிரிவு, ஆய்வகம், ஐந்தாம் தளத்தில் அறுவை அரங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆறாம் தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளுடன் இம்மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - புறநகர் பிரிவு 2024-25ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், சென்னையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு பல் மருத்துவப் பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தாம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 7.24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - புறநகர் பிரிவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றையதினம் திறந்து வைத்தார்.

இது சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை (TNGDCH) நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் புறநகர் பிரிவு ஆக இருக்கும்.

சிறப்பு சிகிச்சைகள்

இந்த பல் மருத்துவமனையில், அடிப்படை பல் சிகிச்சை சேவைகளுடன் கூடுதலாக, ஈறு நோய்கள் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை, செயற்கை பல் பொருத்தும் சிகிச்சை, வாய்முக தாடை அறுவை சிகிச்சை, பல் சீரமைப்பு சிகிச்சை, குழந்தைகளுக்கான சிறப்பு பல் பராமரிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சைகள், பல் பாதுகாப்பு மற்றும் வேர் சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

தாம்பரத்தில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம்; தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பம்மல் - திருநகரிலுள்ள மூவேந்தர் தெரு, பவணந்தியார் பூங்கா, சிடிஓ காலனி ஆகிய இடங்களில் தலா 30 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com