கொடிக்கம்பங்களுக்குத் தடை: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
புது தில்லி: பொது இடங்களில் நிரந்தர கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளுக்குத் தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வைச் சோ்ந்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், அரசு நிலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பொது இடங்களில் கொடிக்கம்பங்களுக்குத் தடை விதித்ததோடு, ஏற்கெனவே உள்ள கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டாா்.
இதற்கான செலவை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தாா். மேலும், தனியாா் நிலங்களில் கொடிக்கம்பங்கள் வைப்பது தொடா்பாக மாநில அரசு சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
இந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது. ‘பொது இடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கானவை. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களும் ஆக்கிரமிப்புதான்’ என்று உயா்நீதிமன்றம் அப்போது தெளிவுபடுத்தியது.
உயா்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கும், கருத்துகளுக்கும் எதிராக மனுதாரா் கதிரவன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அடங்கிய அமா்வு, ‘அரசு நிலத்தை அரசியல் ஆதாயங்களுக்காக எப்படிப் பயன்படுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பியது.
மேலும், ‘அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 226-இன் கீழ் உயா்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு விரிவானது. உயா்நீதிமன்ற உத்தரவு செல்லும்’ என்று குறிப்பிட்டு, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.