திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பேருக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்கள்: அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்!
ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை, சென்னை தண்டையார்பேட்டையில் பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆக. 12) நேரில் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, வடக்கு மாட வீதி நியாய விலைக் கடையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் 1,102 நியாய விலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 37,990 குடும்ப அட்டைகளில் உள்ள 47,193 பயனாளிகளுக்கும், 3,441 குடும்ப அட்டைகளில் உள்ள 4,660 மாற்றுத்திறனாளிகளுக்கும் மொத்தம் 41,431 குடும்ப அட்டைகளில் உள்ள 51,853 பயனாளிகளுக்கு அவர்களது இல்லங்களுக்கு ரேசன் பொருள்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நியாய விலைக் கடைகளை குழுக்களாக பிரிக்கப்பட்டு நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் 124 நியாய விலைக் கடைகளை ஒருங்கிணைத்து 80 குழுக்களாகவும், கிராமப்புற பகுதியில் செயல்படும் 978 நியாய விலைக் கடைகளை ஒருங்கிணைத்து 474 குழுக்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கடைகள் செயல்பட ஏதுவாக ஊரகப் பகுதிகளில் 567 வாகனங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 111 வாகனங்களாக, ஆக மொத்தம் 678 வாகனங்கள் மூலமாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது” என்றார்.
இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திருவேற்காடு நகர்மன்றத்தலைவர் என்.இ.கே.மூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, துணை பதிவாளர் பாலாஜி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் கலைவாணி, மேகநாதன், திமுக நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், பவுல், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!
The Chief Minister's thayumanavar Project launched by Minister Nasser in Tiruvallur district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

