
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.
அதிமுக சார்பில் 2002 முதல் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். அந்த கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இன்று இணைந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார்.
மைத்ரேயன் அரசியல் பயணம்
புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மைத்ரேயன், பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1995 முதல் 1997 வரை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
பின்னர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் 1999 ஆம் ஆண்டு இணைந்தார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது, ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக அதிமுகவில் இருந்து மைத்ரேயனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதையடுத்து. 2023 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், பின்னர் 2024 இல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.