இபிஎஸ்ஸுக்கு தலைமைப் பண்பு இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு...
EPS lacks leadership qualities: OPS alleges
கோப்புப்படம்ADMK
Published on
Updated on
2 min read

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இப்படிப்பட்ட மக்கள் இயக்கம் முப்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது என்றால் அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க, ஆளுமை மிக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர்தான். சாதாரணத் தொண்டன் வணக்கம் தெரிவித்தாலும் பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பண்பை கொண்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.

அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. ஒரு சிறந்த தலைவர் என்பவர் அனைவரையும் துணையாகக் கொண்டு, அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து, இயக்கத்தை திறம்பட மேலாண்மை செய்வார். இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக இருப்பார். ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது சிக்குண்டு கிடப்பதால் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு மதுரையில் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. இது செல்லூர் ராஜுவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.

இதேபோன்று, எம்.ஜி.ஆரின் காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக பதவி வகித்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு. தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது மு. தம்பிதுரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

"செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்" என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில்தான் முடியும்" என்று கூறியுள்ளார்.

Summary

Former Chief Minister O. Panneerselvam has accused AIADMK General Secretary Edappadi Palaniswami of lacking leadership qualities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com