
நெல்லை: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் வரும் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் அமித் ஷா.
இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்தில் உள்ளடக்கிய நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று தொடங்கிய நெல்லை பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார் உள்துறை அமித் ஷா.
அவர் பேசுகையில், திமுக கூட்டணியின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவதுதான். ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவதுதான். சோனியாவுக்கு அவர் மகன் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே லட்சியம். ஆனால், தமிழக மக்களை மேம்படுத்துவதே பாஜக - அதிமுக கூட்டணியின் லட்சியம். நான் சொல்கிறேன் ஒரு நாளும் உதயநிதி முதல்வராக முடியாது, ராகுல் காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது. தமிழகத்தில் டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என திமுகவின் ஊழல் பட்டியல் நீள்கிறது. இதுமட்டுமா, திமுக ஏராளமான ஊழல்களை தொடர்ந்து செய்து வருகிறது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, கைது செய்யப்படுவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ஒரு சட்டம் வரக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் சில அமைச்சர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பதவியில் நீடித்தார்கள். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியை நடத்தலாமா?
சட்டம் என்ன சொல்கிறது, பிரதமரோ, அமைச்சரோ, முதல்வரோ, சிறை செல்ல நேரிட்டால், அவர்கள் பதவியில் தொடரக் கூடாது.
ஆனால், பொன்முடி, செந்தில் பாலாஜி போன்றவர்கள் பல மாதம் சிறையில் இருந்தவர்கள். ஆனாலும் பதவியில் நீடித்தார்கள். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியில் நீடிக்கலாமா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரு கனவை கண்டு கொண்டிருக்கிறார்கள்.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விற்பனை வரியான ஜிஎஸ்டி மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி திட்ட முதலீடு செய்து இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளார்
இந்தியா முழுவதும் சமநிலைக்கான திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து தேசிய ஜனநாயகத்தின் கூட்டணி வெற்றியை அறிவிப்பதற்காக நீங்கள் வந்துள்ளீர்கள். இந்த வெற்றி உங்களால் கொண்டுவர முடியும். வெற்றிக்கான முழக்கத்தை முன்னெடுங்கள் என்று உரையாற்றினார்.
மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் 18 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தோம். கூட்டணியில் இருந்த அதிமுக 21 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இவ்விரண்டையும் கூட்டினால் கூட எளிதாக 39 சதவீத வாக்குகளைப் பெற்றுவிடலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணியல்ல. தமிழகத்தை மேம்படுத்த, தமிழக மக்களின் வளர்ச்சிக்கான கூட்டணி என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.