இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். ராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும்.