

கோவை : கோவை விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்ய காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை விமான நிலையம் அருகில் கடந்த நவம்பர் 2 ம் தேதி கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேடுதல் பணியின்போது, காவல்துறையினர், அவர்களை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தற்போது கோவை மத்திய சிறையில் அவர்கள் 3 பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
விரைவில் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது. இதற்கு இடையே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர மீது, திருப்பூர், மாவட்டத்திலும் கோவை கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலும் கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் சிறைக்குச் சென்று ஜாமீனில் விடுதலையான இவர்கள் கோவை இருகூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வந்து உள்ளனர். அதன் பிறகு தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்கள் மீது கோவை அருகே உள்ள கோவில் பாளையம் காவல் நிலையத்திலும் ஒரு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று இருசக்கர வாகன திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போடப்படும் குண்டர் தடுப்பு சட்டம் தற்போது இவர்கள் மீது பாய்ந்து உள்ளது. கோவை மாநகர காவல் கமிஷனர் சரவணன் சுந்தர் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.