

திமுக அரசு வெறும் 13 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளது, மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக சார்பில் கடந்த பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றில் வெறும் 13 சதவிகித வாக்குறுதிகள் மட்டுமே தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு வருவது போல் தெரியவில்லை. இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு திமுக ஒரு துரும்பு அளவு கூட பணிகள் செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலை சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை. தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. அதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
வருகிற டிசம்பர் 17-ம் தேதி எனது தலைமையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அதற்கு திமுகவை தவிர , அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
பிகாரில் நிதிஷ்குமார் வெற்றி பெற்றதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதே காரணம். தமிழகத்தில் சமூக நீதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் குழித் தோண்டி புதைத்துள்ளார்.
கர்நாடகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, பட்டியல் சமூகத்தினருக்கு அந்த மாநில அரசு ஒப்பந்தங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது தான் சமூக நீதி.
தமிழகத்தில் நகராட்சித் துறையில் 888 கோடி ஊழல் நடந்துள்ளதாக 232 பக்க அறிக்கையை, காவல் துறைக்கு அமலாக்கத் துறை சார்பில் கொடுக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பணிக்கு 25 லட்சம் வரை ஹவால பணம் வந்ததாக 232 பக்கம் அறிக்கை கொடுத்தும் விசாரணை நடத்தவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியானதற்கு விசாரணை நடத்துகிறார்கள். மணல் கொள்ளை நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
விரைவில் மெகா கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
தொழில் முதலீடு முழுமையாக வந்ததாக முதல்வர், அமைச்சர், பொய் கூறுகிறார். 9 சதவிகிதம் தான் முதலீடு வந்துள்ளது. 80 சதவிகிதம் வந்ததாக சொன்னவர்கள். தற்போது 23 சதவிகிதம் வந்துள்ளது என சொல்கிறார்கள். தமிழகத்துக்கு வராமல், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு, தொழில் நிறுவனங்கள் செல்கின்றன. இதற்கு திமுகவின், கலக்சன், கமிசன், கரப்சன் அதிகம் என்பதே காரணமாகும்.
ஜி.கே.மணி புகார் குறித்தும், எனது பெயரை அன்புமணி குறிப்பிட்டு துரோகி என்று சொன்னால் விலகத் தயார் என்ற கேள்விக்கு, பதில் சொல்ல விரும்பவில்லை. கட்சி தொண்டர்களிடம் பேசுகிறேன் என்றார். தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.