

கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியான சம்பவத்தில் விடுதியின் ஊழியர் ஒருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
அந்த ஊழியர் தில்லியின் சப்ஜி மண்டி பகுதியைச் சேர்ந்த பாரத் கோஹ்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரவு விடுதியின் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பை அவர் கவனித்து வந்துள்ளார். கிளப் மேலாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பாரத் கோஹ்லி பெயர் வெளிவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணைக்காக கோஹ்லி கோவாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவா தலைநகா் பனாஜியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அா்போரா பகுதியில் உள்ள பிரபலமான இரவு நேர கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவ்ததில் 25 போ் பலியாகினர். காயங்களுடன் மீட்கப்பட்ட 6 போ், பாம்போலிம் பகுதியில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். பலியான பணியாளா்களில் சிலா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா்.
முதல் தளத்தில் பயணிகள் நடனமாடும் இடம், தரைத்தளத்தில் சமையல் கூடத்துடன் கூடிய இந்த விடுதியில், வார இறுதியையொட்டி ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனா். சமையல் கூடத்தில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், முதல் தளத்தில் நடன நிகழ்ச்சியின்போது மின்சாரம் மூலம் வெடிக்கச் செய்யப்பட்ட பட்டாசுகளால் தீப்பற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘முதல் தளத்தில் பயணிகள் நள்ளிரவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, இப்பட்டாசுகளால் திடீரென தீப்பிடித்து, தரைத்தளத்துக்குப் பரவியது. சமையல் கூடத்தில் புகை மண்டலம் சூழ்ந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலானோா் உயிரிழந்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று போலீஸார் தெரிவித்தனா். ‘தீ விபத்து நேரிட்ட கேளிக்கை விடுதி, உரிய அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, கட்டடத்தை இடிக்க ஊராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நோட்டீஸுக்கு உயரதிகாரிகள் தடை விதித்துவிட்டனா்’ என்று அா்போரா கிராம அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீ விபத்தைத் தொடர்ந்து விடுதியின் தலைமைப் பொது மேலாளா் ராஜீவ் மோதக், பொது மேலாளா் விவேக் சிங், மதுபானக் கூட மேலாளா் ராஜீவ் சிங்கானியா, நுழைவாயில் மேலாளா் ரியான்ஷு தாக்கூா் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
2023-ஆம் ஆண்டு அந்த விடுதி செயல்பட தொடங்குவதற்கு அனுமதி அளித்த அப்போதைய பஞ்சாயத்து இயக்குநா் சித்தி துஷாா் ஹா்லங்கா், அப்போதைய மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினா் செயலா் ஷாமிலா மோன்டேரோ, அப்போதைய கிராம பஞ்சாயத்து செயலா் ரகுவீா் பாக்கா் ஆகிய 3 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.