திமுக ஆட்சியின் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்துள்ளதற்கான ஆதாரங்களை மாநில காவல் துறை தலைமை இயக்குநருக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அதன்படி, வழக்குப் பதிவு செய்யவும் கோரியுள்ளது. அந்தத் துறையில் வேலைவாய்ப்பு வழங்கியதில் ரூ.888 கோடிக்கு முறைகேடு நடைபெற்ற்கான ஆதாரங்களையும் அமலாக்கத் துறை வழங்கியுள்ளது.
தமிகத்தின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் முறைகேடுகளுக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. அண்மையில் சென்னை மாநகராட்சியில், தனியாருக்கு தூய்மைப் பணி ஒப்பந்தம் வழங்கியதிலும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக
அமலாக்கத் துறை அனுப்பிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அமலாக்கத் துறை அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். முறைகேடுகளில் தொடா்புடையவா்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

