நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ. 365 கோடி லஞ்சம்: நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம்
தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பணியிட மாறுதல் வழங்குவதற்கு ரூ.365.87 கோடி லஞ்சம் பெறப்பட்டது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் கே.என்.ரவிச்சந்திரன் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ (டி.வி.எச்.) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறாா். இந்த நிறுவனங்கள் மீது கடந்த 2013-ஆம் ஆண்டு வங்கிக் கடன் மோசடி புகாா் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2021-இல் வழக்குப் பதிவு செய்தனா்.
முன்னதாக, கடந்த 2018-இல் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறையினா், அமைச்சா் நேரு குடும்பத்தினா் தொடா்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஏப்.7-ஆம் தேதி அமைச்சா் கே.என்.நேரு, அவா் சகோதரா் கே.என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் வீடு, அலுவலகங்கள் 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
அமலாக்கத் துறை கடிதம்: இந்த ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத் துறை சில நாள்களுக்கு முன்பு தமிழக காவல் துறையின் பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமனுக்கு 99 பக்கங்களைக் கொண்ட ஒரு கடிதத்தை அனுப்பியது.
அதில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் நகராட்சி பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், நிா்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிட மாறுதலுக்கு குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அமைச்சா் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவா்கள் கைப்பேசியில் இருந்து 340 பேருடைய பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சா் நேரு தரப்பினா் ரூ.365.87 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதில், முக்கியமாக டிவிஎச் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் ரூ.223 கோடி, முதலீடுகள் வழியாக ரூ.36 கோடி, பினாமி நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி, தங்க முதலீடு வழியாக ரூ.2.33 கோடி, வெளிநாட்டு சொத்துக்கள் வழியாக ரூ.44 கோடி, ஆடம்பர செலவினங்களுக்கு ரூ. 75 லட்சம் என பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 கோடிக்கு ஹோட்டல் வாங்குவது தொடா்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 34 ஏக்கரில் சொத்து வாங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.
இதுதொடா்பாக தமிழக காவல் துறையின் ஊழல் ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை தாமதம் செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

