திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் திறப்பு குறித்து முதல்வா் அறிவிப்பாா்: அமைச்சா் கே.என்.நேரு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத் திறப்பு குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.26.50 கோடியில் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் நேரு செய்தியாளா்களிடம் கூறியது:
இந்தப் பேருந்து நிலையம் 51 பேருந்துகளை நிறுத்தி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 61 கடைகள், உணவகங்கள், பொருள்கள் வைப்பறை, ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கான அறைகள், சுகாதாரமான குடிநீா் வசதி, கழிவறை வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 99 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. சிறு, சிறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திண்டிவனம் நகராட்சித் தீா்மானத்தின்படி பேருந்து நிலையத்துக்கு முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயா் வைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை திறப்பது குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என்றாா் நேரு.
ஆய்வில் முன்னாள் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, புதுச்சேரி மாநில எதிா்க்கட்சித் தலைவா் சிவா, ஒலக்கூா் ஒன்றியக்குழுத் தலைவா் சொக்கலிங்கம், திண்டிவனம் நகரச் செயலா் கண்ணன், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா்கள் டி.கே.பி.சுரேஷ், எம்.டி.பாபு, மாவட்ட வா்த்தகா் அணித் துணை அமைப்பாளா் பிரகாஷ், மருத்துவரணி துணை அமைப்பாளா் சூரியபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

