அமலாக்கத் துறை வழக்கு: செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றும் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோா் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறைம் வழக்குப்பதிவு செய்து, செந்தில்பாலாஜியை கைது செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடையே இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் முன்னாள் மேலாண் இயக்குநா் கே.கணேசன், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கணேசனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

