

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை வானகரத்தில் தொடங்கிய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக தலைவர்கள் உரையாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அதிமுக கூட்டணிக் கட்சிகள் பற்றி முடிவெடுக்கும் உரிமை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குவது உள்ளிட்ட 16 முக்கிய தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுக தலைவர்கள் பேசத் தொடங்கினர். அவர்களின் பேச்சில் இன்று, அதிகமாக துரோகிகள், உறவாடிக் கெடுப்பவர்கள், அரசியல் தரகர்கள் என்பது போன்ற சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. அதிமுகவிலிருந்து வெளியேறிய தலைவர்கள் மற்றும் அதிமுக தலைமைக்கு எதிராகப் பேசி வருபவர்களைக் குற்றம்சாட்டும் வகையில் இந்த வார்த்தைகளை அதிமுக தலைவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே, இதுவரை பேசிய தலைவர்கள் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒருபக்கம், பொதுக்குழு நடைபெற்று வரும் திருமண மண்டபத்தில் மதிய விருந்தும் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை, பொதுக்குழுவில் ஆட்டுக்கறி பிரியாணி, கறிக்குழம்பு, வறுத்த கோழிக்கறி, வஞ்சரம் மீன் வறுவல் என அசைவ விருந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்பட்டு வருகிறது.
மறுபக்கம் சைவ உணவும் படுஜோராகத் தயாராகி பரிமாறப்பட்டு வருகிறது.
அடுத்த 100 நாள்கள் தேர்தல் பணியை முழு நேர பணி, அதிமுக ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வேலுமணி கூறினார். திமுக ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்று நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், உறவாடிக் கெடுப்பவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். எதிரிகள் யார் என்று நமக்குத் தெரியும். துரோகிகள் யார் என்றும் தெரியும். ஆனா, நம்முடன் உறவாடிக் கெடுப்பவர்கள் மற்றும் அரசியல் புரோக்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த முற்படுபவர்கள் அனைவரும் துரோகிகள். எதிரிகளை மட்டுமல்லாமல், துரோகிகளும் ஒழிக்கப்பட வேண்டும். கடந்த காலம் போல துரோகிகளும் காணாமல் போய்விட வேண்டும் என்று கே.பி. முனுசாமி கூறினார். எதிர்க்கட்சிகளை விடவும், துரோகிகள் பற்றியே தலைவர்கள் பலரும் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.
அண்மையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், எதிரிகளை விடவும், துரோகிகள் அழிய வேண்டும் என்ற வார்த்தை இன்றையப் பொதுக்குழுவில் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவே கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.