

அண்ணாமலையை அரசியலுக்காகச் சந்திக்கவில்லை நட்பு ரீதியாக சந்தித்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தலை நோக்கிப் பயணித்து வருகிறது. யாருடன் கூட்டணி என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும். அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணிகள் திரள வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அரசியலுக்காகச் சந்திக்கவில்லை, அது நட்பு ரீதியான சந்திப்பு என்றார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதங்களைக் கடந்து வாழும் மக்கள் மத்தியில் அரசியலுக்காக யாரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த தினகரன், எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று தான் நினைக்கும். ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றால் அந்த தொகுதி மக்களுக்குப் பயன்பெறும் என்றும் தெரிவித்தார். வரும் தேர்தலில் கடுமையான போட்டி உள்ளதால் யாருக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். இதனால் கூட்டாட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்
தற்போது சில கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாகவும் அது தற்போது வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது என்றும் அவர் கூறினார். ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளது கொலை, கொள்ளை அதிகமாக உள்ளது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. மதுபோதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இதனை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக வெற்றி கழக கூட்டணி வலுவாக இருந்தால் திமுகவுக்கு போட்டியாக இருக்கும். தான் எந்த கூட்டணி என்று இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்த தினகரன் மற்ற கட்சித் தலைவர்கள் குறித்து கட்சிகளைக் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் விமர்சனம் செய்யாது என்றும் அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் எஸ் கே செல்வம் உடன் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.