

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; கிரானைட் கல் தூண் என்று கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நிகழாண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை தமிழக காவல் துறையினர் அளிக்க வேண்டும் என கடந்த 1-ஆம் தேதி என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை திருநாளன்று எந்தவித முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் இன்று(டிச. 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி? என்றும் அரசு தரப்பு வாதங்களை முன் வைத்தது.
இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் நடைபெற்ற விசாரணையில், ”மனுதாரர் குறிப்பிட்டுள்ள தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் இரு உச்சிகள் உள்ளன; ஒன்றில் தர்காவும் மற்றொன்றில் கோயிலும் உள்ளன.
8 அடி உயரம், 1 அடி அகலம் கொண்ட கிரானைட்டால் ஆன தூண்தான் உள்ளது. தீபத்தூண்தான் என நிரூபிக்க எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் மலைகளை அளப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சர்வேதூண்” என்று அரசு தரப்பு வாதிட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல என்பதை எப்படி கூறுகிறீர்கள்” கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, ”திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதரமும் இல்லை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; கிரானைட் கல் தூண்” என்று கோயில் நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான வழக்கை வரும் டிச. 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க: கார்த்திகை மாதம் என்றும் பாராமல் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.