

மகளிர் உரிமை தொகைத் திட்டம் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் என்றும் அது , தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில் 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' பிரசாரத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார். வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,
பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகை உள்ளது. ரூ. 1,000 பணத்தை வைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் இந்த திட்டத்தின் வெற்றி.
திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம், அதனால் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம்.
ஆட்சிக்கு வந்தபோது இருந்த நிதி நெருக்கடிகளை சரிசெய்ய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அப்படிதான் மகளிர் உரிமைத் தொகையும் வழங்கப்படுகிறது. தேர்தலுக்காக இதை செய்யவில்லை. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அடுத்த 15 ஆண்டுகாலம் நிச்சயம் திமுகதான் ஆட்சியில் இருக்கும். யார் என்ன விமர்சனங்கள் வைத்தாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக டெண்டர் விடப்பட்டுவிட்டது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.