மூளைக் காய்ச்சலை சுமந்து வரும் நத்தைகள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

மழை மற்றும் குளிர் காலங்களில் வீடுகளுக்கு அருகே காணப்படும் நத்தைகள் மூலமாக மூளைக் காய்ச்சல் பரவக் கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மூளைக் காய்ச்சலை சுமந்து வரும் நத்தைகள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்
Updated on
2 min read

மழை மற்றும் குளிர் காலங்களில் வீடுகளுக்கு அருகே காணப்படும் நத்தைகள் மூலமாக மூளைக் காய்ச்சல் பரவக் கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நத்தைகளின் எச்சத்தை வெறும் கைகள் அல்லது கால்களால் தொடுவதைத் தவிர்க்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும், செடிகள் அதிகம் உள்ள இடங்களிலும் ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றால் நேரடியாக எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், மறைமுகமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

"லிசாசாட்டினா ஃபுலிக்கா' என்ற விலங்கியல் பெயரில் அழைக்கப்படும் ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள், 500 வகையான தாவரங்களையும், கழிவுகளையும் உட்கொள்கின்றன. அதன் உடலில் இரு பாலினத்துக்கான இனப்பெருக்க உறுப்புகளும் ஒருசேர அமைந்திருக்கும். ஒரே நேரத்தில் 200 முட்டைகளைப் பொறித்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய இந்த நத்தையின் ஆயுள்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். மழைக் காலத்தில் பல்கிப் பெருகக் கூடிய இந்த உயிரினங்கள் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வணிகக் கப்பல்கள் வாயிலாக இந்தியாவுக்குள் ஊடுருவியவை.

முதலில் காடுகளில் இருந்த ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள், தற்போது நகர்ப்புறங்களில் மனிதர்களுக்கு நடுவே வாழும் வகையில் தகவமைத்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் என்ற நுண்ணிய ஒட்டுண்ணி உள்ளது. இது எலிகளிடையே தொற்றை ஏற்படுத்தி அதன் உடலினுள் பெருக்கமடைகின்றன.

தொற்றுக்குள்ளான எலிகளின் கழிவுகள் வாயிலாக அந்த ஒட்டுண்ணி வெளியேற்றப்படுகிறது. ஆப்பிரிக்க ராட்சத நத்தைகளின் முக்கிய உணவே அந்த கழிவுதான். அதன்மூலம் நோய்க்குள்ளான நத்தைகள், அவை வீரியம் குறையாமல் நமக்கும் கடத்துவதாகத் தெரிவிக்கிறார் பொது நல மருத்துவ நிபுணர் டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஒட்டுண்ணி பாதிப்புக்குள்ளான நத்தை நகர்ந்து செல்லும்போது அதன் ஜவ்வு நீரிலும் தொற்று பரவியிருக்கும். அதைத் தொட்ட கைகளால் மூக்கு - வாய் பகுதிகளைத் தொட்டால் ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் பாதிப்பு நமக்கும் பரவிவிடும்.

இதனால், காய்ச்சல், பின் கழுத்து வலி, கழுத்தில் இறுக்கம், மயக்கம், குமட்டல், மூர்ச்சை நிலை ஏற்படலாம். அதன் தொடர்ச்சியாக ஈசினோஃபிலிக் மெனிங்கோ என்சபலிட்டிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சல் உருவாகலாம்.

மிகவும் அரிதான நோய் என்றாலும் மழைக் காலங்களில் இவை பரவ அதிக வாய்ப்புள்ளது. இதனால் உயிரிழப்பு நேரிடுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. எனினும் நாள்பட்ட உடல் நலக் குறைவுக்கு அவை வித்திடுகின்றன. அறிகுறிகளை அலட்சியப்படுத்தாது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தால் இந்த தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.

ஸ்டீராய்டு மருந்துகளும், அல்பெண்டசோல் எனப்படும் ஒட்டுண்ணி அழிப்பு மருந்துகளும்தான் இதற்கான சிகிச்சை வழிமுறைகள். அவற்றை முறையாக கடைப்பிடித்தால் முழுமையாக குணமடைவது உறுதி என்றாலும், இந்நோயை வருமுன்னரே தடுத்து விடுவதுதான் சிறந்தது.

கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் பரங்கி மலை, திரிசூலம், பெருங்களத்தூர் பகுதிகளில் அதிக அளவில் இந்த நத்தைகள் காணப்பட்டது தெரியவந்தது. இதைத்தவிர, கோவை, சிதம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள் பெருக்கமடைந்துள்ளன.

எனவே, வீடுகளுக்கு அருகே அவை காணப்பட்டால், அவற்றை கையுறைகள் அணிந்து அப்புறப்படுத்துவது நல்லது. வெறுங்கால்களிலோ, வெறும் கைகளாலோ அதன் எச்சத்தைத் தொடக்கூடாது. அவ்வாறு தொட நேர்ந்தாலும், உடனடியாக கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். நத்தைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சுகாதாரத் துறை, வேளாண் துறையினரிடம் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் அதனை ஒழிக்க உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com