

மத்திய அரசுக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழ்நாட்டின் ஞாபகம் வருவதாக திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் விமர்சித்துள்ளார்.
மக்களவையில் இன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றத்துக்கு எதிரான விவாதம் நடைபெற்றது. அதில் எம்.பி. கனிமொழி பேசுகையில், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரிலேயே வேலைவாய்ப்பு உறுதி என்று தெளிவாக இருக்கிறது.
முதலில் இருந்த மசோதா, வேலை நாடுபவர்களுக்கு வேலை தரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போதைய மசோதா, அதிகாரத்தை மத்திய அரசின் கைகளில் குவிக்கக்கூடிய ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் முதியவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், நீங்கள் கொண்டு வந்திருக்கும் மசோதா, மேற்கூறப்பட்டவர்களுக்கு எதிராகவும், மாநில சுயாட்சியைக் கெடுக்கக் கூடியதாகவும் ஏழை மக்களுக்கு எதிரான ஒன்றாகவும் கொண்டு வரப்படுகிறது.
உங்களுக்கு வ.உ.சி. என்றாலே யாரென்று தெரியாது. நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்த செம்மல் யாரென்றே உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்கு தமிழ்நாட்டின் ஞாபகம் எப்போது வருமென்றால் - தேர்தல் வரும்போதுதான். தேர்தல் நேரத்தில் வந்து, 'நான் தமிழனாகப் பிறக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன்' என்று சொல்வீர்கள்.
அதேவேளையில், பிகார் தேர்தல் நேரத்தில், தமிழர்கள் பிகாரிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்வீர்கள், ஒடிஸாவுக்கு தேர்தல் வந்தால், தமிழர்கள் இங்கு வந்து அதிகாரத்தைப் பறிக்க நினைக்கிறார்கள் என்று தமிழர்களுக்கு எதிராகப் பேசக்கூடியவர்கள். இவ்வாறு எங்கள் மாநில மக்களைப் பற்றி கவலைகொள்ளாத நீங்கள், எப்படி எங்கள் கிராமங்களில் உள்ள மக்களைப் புரிந்துகொண்டு, ஒதுக்கீடு செய்வீர்கள் என்பதற்கு விளக்கமளியுங்கள்.
இத்தனை ஆண்டுகளாக, மக்களின் தேவைகளுக்கேற்ப மாநில அரசு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த உரிமையையும் எங்களிடமிருந்து பறித்துக் கொள்வதுபோல, நீங்கள் கொண்டுவரும் அத்தனை மசோதாக்களிலும் மாநில உரிமைகள், மாநில சுயாட்சி என்பது அழிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை: 2026 இறுதிக்குள் புதிய சுங்கக்கட்டண வசூல் முறை அமல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.